ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), 14 அக்டோபர் 2008 ( 12:37 IST )
டெல்லி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. மத்தியப் பிரதேசம், டெல்லி, சத்திஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிஷோராம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்து விட்டன.
இந்நிலையில், மேற்கூறிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை, தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசாமி இன்று அறிவித்தார். சத்திஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 25 ஆம் தேதியன்றும், டெல்லி மற்றும் மிஷோராம் ஆகிய மாநிலங்களில் 29 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் அவர் கூறினார். அதேபோன்று ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் கோபாலசாமி தெரிவித்தார்.
அதே சமயம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான தேர்தல் தேதி குறித்து முடிவு ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment