ராமர் பாலத்தை ராமரே அழித்து விட்டார் : மத்திய அரசு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 14 அக்டோபர் 2008 ( 16:41 IST )
சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, ராமர் பாலம் வழிபாட்டுத் தலமல்ல என்றும், அதை ராமரே அழித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.
ராமர் பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதை எதிர்த்து பாஜக, இந்து அமைப்புகள், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி உள்ளிட்ட சிலர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், 100 பக்கங்கள் கொண்ட பதில் மனுவை மத்திய அரசு கடந்த 11 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் 'ராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் என்று அறியப்படும் பகுதி, அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் கூறுவதைப்போல் வழிபாட்டுத் தலமல்ல' என்று தெரிவித்துள்ளது.
'இந்து மதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் ராமர் பாலம் சித்தரிக்கப்படவில்லை. இலங்கைக்கு சென்று விட்டு திரும்பும்போது, ராமரே அந்தப் பாலத்தை அழித்துவிட்டார்' என்று,கம்ப ராமாயணத்தில் புலவர் கம்பர் குறிப்பிட்டுள்ளதை மேற்கோள் காட்டி தனது பதில் மனுவில் மத்திய அரசு கூறியுள்ளது. ராமேஸ்வரம்-இலங்கையின் மன்னாருக்கு இடையே லைம்ஸ்டோன் பாறைத் திட்டுக்களால் ஆன இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 48 கி.மீ ஆகும்.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கில், இத்திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது பற்றி பரிசீலிக்க ஒப்புக் கொண்ட மத்திய அரசு, சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர பச்சோரி தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.இக்குழுவின் அறிக்கை வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு தற்போது இந்த பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment