புகைக்கத் தடை : நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் யார்?
சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 1 அக்டோபர் 2008 ( 11:19 IST )
பொது இடங்களில் நாளை முதல் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புகைப் பிடிப்போரால் விடப்படும் புகையை சுவாசிப்போர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படுகின்றன. புகையிலை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுப்பதன் மூலமே இந்த நோய்களையும், இறப்புகளையும் தடுத்திட முடியும்.எனவே, பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் இந்தியா முழுவதும் நாளை முதல் (அக்டோபர் 2) அமலாக்கப்படுகிறது. இதன் மூலம் பொது இடங்களில் புகைப்பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
பொது இடங்கள் என்பது பொது மக்கள் கூடுகின்ற இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள அரங்கங்கள், திறந்தவெளி அரங்கங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், அலுவலக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், நீதிமன்ற கட்டிடங்கள், பொதுமக்கள் புழங்கும் பகுதிகளான உணவு விடுதிகள், தங்குமிடங்கள், சிற்றுண்டி விடுதிகள், பஸ் நிலையங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவை அடங்கும்.
அதிகாரிகள் விபரம்
தமிழகத்தில் இந்தச் சட்டத்தை அமலாக்கும் அதிகாரிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.அதன்படி, காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் ஆவார்கள்.மேலும், மத்திய கலால் ஆய்வாளர், வருமான வரித்துறை ஆய்வாளர்கள், விற்பனை வரி ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், ரயில் நிலையத்தின் துணை நிலைய அதிகாரிகள், தலைமை நிலைய அதிகாரிகள், நிலைய பொறுப்பாளர்கள், அனைத்து அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள், அதற்கு இணையான அதிகாரிகள் ஆகியோர் அவரவர் எல்லைக்குட்ட பகுதிகளில் புகைப்பிடிப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
அதேபோல், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவமனை நிர்வாகி, தபால் நிலைய அதிகாரி, தனியார் அலுவலகத்தின் தலைமை நிலைய அதிகாரி, மனிதவள மேம்பாட்டு மேலாளர், தலைமை நிர்வாகி, கல்லூரி, பள்ளி, தலைமை ஆசிரியர், முதல்வர், நூலகர், துணை நூலகர், நூலக பொறுப்பாளர் மற்றும் மற்ற நூலக அலுவலர், விமான நிலையங்களின் நிலைய மேலாளர், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள், அனைத்து பொது இடங்களின் இயக்குநர், சுகாதாரப்பணிகள் இயக்குனர் ஆகியோர் புகைப் பிடிக்க தடைவிதிக்கும் சட்டத்தை அமல்படுத்துவார்கள்.
அனைத்து பொது இடங்களின் மத்திய மற்றும் மாநில பொறுப்பு அதிகாரிகள், புகையிலை கட்டுப்பாடு மாநில மற்றும் மாவட்ட நிலைய ஒருங்கிணைப்பு அதிகாரி ஆகியோர் பொது இடங்களில் புகைப் பிடிப்பவரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். இந்த சட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment