Wednesday, September 17, 2008

கோவில் அருகே மசூதி கட்டலாமா?
Tuesday, 09.16.2008, 05:48am (GMT+5.5)

சென்னையில் கோவில் அருகே மசூதி கட்டுவது தொடர்பான வழக்கில், சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் தற்போதைய நிலையே நீடிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள்
சென்னை மடிப்பாக்கம் அருகே உள்ளகரம் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்து சார்பில் 1986-ம் ஆண்டு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு 2 ஆண்டுகளுக்குள் மசூதி கட்டிக் கொள்ள அனுமதியும் அளிக்கப்பட்டது.
எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த இடத்தில் மசூதி கட்டப்படவில்லை.
இதனிடையே, இந்த நிலம் அருகே பெருமாள் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இந்த நிலையில் அங்கு வழிபாட்டுத் தலங்கள் அமைவது பற்றி விசாரணை நடத்திய சப்-கலெக்டர், `இப்பகுதியில் கோவில் கட்டப்பட்டு விட்டதால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படாமல் தடுக்க மசூதி கட்டுவதற்கு வேறொரு இடத்தை கொடுத்தால் நல்லது' என்று அறிக்கை தாக்கல் செய்தார். இதனால் அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
ஐகோர்ட்டு அனுமதி
இதை எதிர்த்து முஸ்லிம் கலாசார அமைப்பினர் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
`வெவ்வேறான இரண்டு வழிபாட்டுத் தலங்கள் அருகருகே இருந்தால் அது மத நல்லிணக்கத்திற்கு உதவியாகத்தான் இருக்கும்' என்று கருத்து தெரிவித்த ஐகோர்ட்டு அந்த இடத்தில் மசூதி கட்டுவதற்கு அனுமதியும் வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, சென்னை நகர்ப்புற நலச் சங்கம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
தற்போதைய நிலையே நீடிக்கும்
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோலி சொராப்ஜி கூறுகையில், `அருகருகே இருவேறு பிரிவினரின் வழிபாட்டுத் தலங்கள் இருந்தால் அப்பகுதியில் பிரச்சினையும், பதற்றமான சூழ்நிலையும் ஏற்படும். மேலும் மசூதி கட்டப்பட இருக்கும் இடம் நீர்பிடிப்பு பகுதியாகும். எனவே, முஸ்லிம்கள் வழிபாட்டுத் தலம் அமைக்க வேறு இடத்தை ஒதுக்கீடு செய்யவேண்டும்' என்று வாதிட்டார்.
எனினும், நீதிபதிகள் இருவரும் `இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் தற்போதைய நிலையே தொடரவேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
மேலும், இது தொடர்பாக முஸ்லிம் கலாசார அமைப்பினர் விளக்கம் அளிக்கும்படியும் நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments: