இந்தியா அணுஆயுத சோதனை நடத்தினால் நடவடிக்கை: யு.எஸ்
வாஷிங்டன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2008 ( 14:11 IST )
'அணு ஆயுத சோதனை நடத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளதுபோல, அதற்கு எதிர் நடவடிக்கை எடுக்கும் உரிமை நமக்கு உண்டு' என்று அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுவிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் வில்லியம் பர்ன்ஸ் கூறியதாவது: இந்தியாவுக்கு எப்படி அணுஆயுத சோதனை நடத்துவதற்கான உரிமை உள்ளதோ, அதேபோன்று பதில் நடவடிக்கை எடுக்கும் இறையாண்மை ரீதியான உரிமை நமக்கும் உண்டு. 2005ம் ஆண்டு முதல் கடைபிடித்துவரும் தன்னிச்சையான சுயபரிசோதனைத் தடையை தொடர்ந்து கடைபிடிப்போம் என்று இந்தியா கடந்த 2006ல் உறுதி அளித்துள்ளது. இதையும் மீறி இந்தியா அணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு பதிலடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நடவடிக்கை ஹென்றி ஹைட் சட்டத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார். எனவே தனது உறுதிமொழியை மீறினாலோ அல்லது சர்வதேச அணுசக்தி முகமையுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தை மீறினாலோ இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தம் முடிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment