Monday, September 22, 2008

பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், விஎச்பிக்கு தடை கோரும் பாஸ்வான்,

செப்டம்பர் 22, 2008

புதுச்சேரி: மதக் கலவரத்தை தூண்டி வரும் பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என மத்திய இரும்பு, ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

நாட்டில் தீவிரவாதிகள் நடத்தி வரும் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக ஆளும் கர்நாடகா, ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில், சிறுபான்மையினர் மீது பஜ்ரங் தள், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நாங்கள் தான் செய்தோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளன.மதக் கலவரத்தை தூண்டி வரும் இந்த அமைப்புகளை தடை செய்ய வேண்டும். கலவரத்தை அடக்க தவறிய மாநில அரசுகளை சட்டப் பிரிவு 355ன் கீழ் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும். அதை ஏற்காதபட்சத்தில் சட்டப்பிரிவு 356 பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க வேண்டும்.

தீவிரவாதத்தை தடுக்க பொடா மற்றும் தடா சட்டங்கள் தேவையில்லை. தற்போதுள்ள சட்டங்களே போதுமானது. பொடா, தடை சட்டங்கள் அமலுக்கு வந்தால் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும். மேலும் அந்த சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உள்ளது.மதத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதத்தை தடுக்க மதத் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமுதாயத் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் உள்ளடக்கிய உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும். இக்குழுவினர் விவாதித்து, தீவிரவாத அமைப்புகளை தடை செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்.பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியிருப்பது அரசியலாக்கும் செயல். இதை, தேசிய பிரச்னையாக கருத வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

No comments: