Saturday, October 11, 2008

செய்தி துளிகள்

கடலூர்: கடலூரிலிருந்து துபாய்க்கு விரைவில் எம்.எஸ்.வி. சூரிய கேசரி என்ற மினி கப்பல் விடப்படவுள்ளது. தனியாருக்குச் சொந்தமான இந்தக் கப்பலின் எடை 750 டன்கள் ஆகும். இதற்கான நீராட்டு விழா கடலூர் துறைமுகத்தில் நடந்தது.கடலூர் துறைமுகம் தைக்கால் தோணித்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த கப்பலை உருவாக்கி உள்ளனர். இந்த கப்பலின் நீளம் மேல்புறம் 141 அடியும், கீழ் புறம் 131 அடியும், 6 அடி அகலமும் 22 அடி உயரமும் கொண்டதாகும்.

லக்னோ: உ.பி. மாநிலம் சம்பல் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பிரபல கொள்ளைக்காரி சீமா பரிஹார், சமாஜ்வாடி கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளார்.பயங்கர கொள்ளைக்காரியான மறைந்த, பூலான் தேவியைத் தொடர்ந்து அரசியலுக்கு வரும் சம்பல் கொள்ளைக்காரி என்ற பெருமை சீமாவுக்குக் கிடைத்துள்ளது.உ.பி. மாநிலம் ஒரையா மாவட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் பங்கேற்ற கூட்டத்தில் இந்த அறிவிப்பை சீமா பரிஹார் வெளியிட்டார்.

சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள சர்ச்சில் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காம்பவுண்டு சுவரில் உள்ள கண்ணாடிக் கூண்டு உடைந்தது.தமிழகத்தில் ஆங்காங்கு கிறிஸ்தவ ஆலயங்கள் மீது சில விஷமிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கல்லறையைக் கூட விடாமல் தாக்கியுள்ளனர் விஷமிகள். இந்த நிலையில் தலைநகர் சென்னையிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 3 அல்லது நான்கு கட்ட தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மத்திய அரசு தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்து வந்தது. அமர்நாத் நில விவகாரத்தில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி விலக்கிக் கொண்டதால் ஆசாத் அரசு கவிழ்ந்தது

இஸ்லாமாபாத்: அல் கொய்தா தலைவர் பின் லேடன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து பாகிஸ்தான் அரசிடம் எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு லேடன் குறித்து ஏதாவது தெரிந்தால் அதை சொல்வதோடு மட்டுமல்லாமல், நாங்களே லேடனைப் பிடிக்க நடவடிக்கை எடுப்போம் என்று அந்நாட்டு செய்தித்துறை அமைச்சர் ஷெர்ரி ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லைப் பகுதியில்தான் பின்லேடன் பதுங்கியிருக்கிறார் என்று அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான பாரக் ஓபாமாவும், ஜான் மெக்கெய்னும் சமீபத்தில் தெரிவித்தனர்.

வாஷிங்டன்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த 123 ஒப்பந்தத்தில் (இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்) இந்தியாவும், அமெரிக்காவும் இன்று கையெழுத்திட்டன.

ஆஸ்லோ: பல நாடுகளில் அமைதியை நிலைநாட்ட சிறந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் மார்டி அதிஸாரிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இந்தியாவின் முதலாவது ஆள் இல்லாத நிலவு விண்கலமான சந்திராயன்-1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 22ம் தேதி காலை 6.20 மணிக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் சந்திராயன் நிலவுக்கு பயணிக்கவுள்ளது.

கோவையில் நடந்த தொடர்குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 167 பேர்விசாரணைக்காக கோவை நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்படுகிறார்கள். இவர்களில் 131 பேருக்கு ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை நகல்கள் வழங்கப்பட்டு விட்டன. மற்றவர்கள்குற்றப்பத்திரிக்கை நகல்களை வாங்க மறுத்து விட்டனர்.

No comments: