இந்தியாவுக்கு யுரேனியம் விற்க முடியாது : ஆஸ்திரேலியா மெல்போர்ன் 8 செப்டம்பர்
அணு ஆயுதப் பரவல் தடை உடன்படிக்கை (என்.பி.டி) யில் கையெழுத்திடாதவரை இந்தியாவுக்கு யுரேனியம் விற்க முடியாது என ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு அணு எரி பொருள் வழங்க ஒப்புதல் தெரிவித்த என்.எஸ்.ஜியின் முடிவுக்கு ஆஸ்திரேலியா வரவேற்பு தெரிவித்திருந்தது. இருந்தபோதிலும், என்.பி.டி-யில் கையெழுத்திட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமே ஆஸ்திரேலியா யுரேனியம் வழங்கும் என்பதே ஆளும் தொழிலாளர் கட்சியின் கொள்கை.இதன் காரணமாக என்.பி.டி-யில் கையெழுத்திடாதவரை இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க முடியாது என ஆஸ்திரேலிய வணிகத் துறை அமைச்சர் சிமன் கிரியன் தெரிவித்துள்ளார். 'தி ஆஸ்திரேலியன்' என்ற நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர், என்.பி.டியில் இந்தியா உறுப்பினராக இல்லாததால்,தற்போதைக்கு ஆஸ்திரேலியாவால் இந்தியாவுக்கு யுரேனியம் விற்க முடியாது என்று கூறியுள்ளார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சியான ஃபெடரல் கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெடரல் கட்சியைச் சேர்ந்த ஆண்ட்ரூ ராப் மேலும் கூறுகையில்,அடுத்த வாரம் இந்தியாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், இருநாடுகளுக்கு இடையே புதிய யுரேனிய வணிகக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார். அத்துடன் பசுமைக்குடில் வாயுக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அணு சக்தி தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் தயாரிக்க இந்தியா மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய அரசு துணைபுரிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment