வேலூரில் பத்திரிகை அலுவலகம் மீது முஸ்லிம் அமைப்பு தாக்குதல்!
செவ்வாய், 2 செப்டம்பர் 2008( 15:21 IST )
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டதாகக் கூறி வேலூரில் தினமலர் பத்திரிகை அலுவலகத்தை முஸ்லிம் அமைப்புகள் முற்றுகையிட்டனர். அப்போது அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.நபிகள் நாயகம் குறித்து கார்ட்டூன் ஒன்று தினமலர் நாளிதழின் வேலூர் உள்பட 5 பதிப்புகளில் நேற்று வெளியானது. இந்த கார்ட்டூன் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி முஸ்லிம் அமைப்புகள் இன்று வேலூர் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது, நபிகள் நாயகத்தை இழிவுப்படுத்தி கார்ட்டூன் வெளியிட்ட தினமலர் நிர்வாகியை கைது செய்ய வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.அப்போது, திடீரென கூட்டத்தில் இருந்தவர்களில் சிலர் பத்திரிகை அலுவலகத்தை கற்கள் வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் அலுவலக ஜன்னல், கார் கண்ணாடிகள் உடைந்தன. அப்போது சிதறிய கண்ணாடி துண்டுகள் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் மீது விழுந்தது. இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் தர்மேந்திர பிரதாப் யாதவ் உள்பட காவல்துறை உயரதிகாரிகள் விரைந்து வந்து முஸ்லிம் அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இழிவுப்படுத்தும் வகையில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment